இந்தியை எதிர்த்து கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரெயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி


இந்தியை எதிர்த்து கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரெயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Jan 2021 2:22 AM GMT (Updated: 7 Jan 2021 2:22 AM GMT)

இந்தியை எதிர்த்து கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரெயில் நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடிக்கு தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அப்போது, கடந்த 1953-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, தனது தாத்தா கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி-பழங்காநத்தம் ரெயில் நிலையத்துக்கு சென்று, தனது தாத்தாவின் போராட்டங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, எனது தாத்தா இந்த ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரெயில் மறியல் செய்தும், ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழித்தும் போராட்டம் நடத்தினார்.

மகிழ்ச்சியாக உள்ளது

இந்த ரெயில் நிலையத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது தமிழகத்தில் இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி மொழியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம் என்றார். தொடர்ந்து, உங்கள் பெரியப்பா(மு.க.அழகிரி) தி.மு.க. பற்றி விமர்சித்து பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட போது, நான் அதை பார்க்கவில்லை என்றுகூறினார்.

பின்னர், ரெயில் நிலையம் அருகே உள்ள வீடுகளுக்கு நடந்து சென்று, தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, ரெயில்வே காலனி பொதுமக்கள், ரெயில்கள் வரும் நேரம் மட்டுமின்றி, இப்பகுதிக்கு தொடர்ந்து பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்து சென்றார்.

பிரசாரம்

நிகழ்ச்சியில் சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ., புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக்கழக தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தொட்டியம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். தொட்டியம் வாணப்பட்டறை கார்னர் மற்றும் காட்டுப்புத்தூர் பஸ்நிலையம் பகுதிகளில் வேனில் இருந்தபடியே பொதுமக்களிடம் பேசினார்.

இதுபோல் முசிறி கைகாட்டியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் வேனில் நின்றபடி உதயநிதிஸ்டாலின் பேசியதாவது:-

முசிறியில் தி.மு.க. போட்டி

இங்கு நான் பிரசாரம் சென்ற இடத்தில் எல்லாம் மிகுந்த எழுச்சி காணப்படுகிறது. தலைவருக்கு போன்செய்து முசிறி தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று கூறுவேன். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி வருவதாக கூறியுள்ளனர். ஜெயலலிதா இறப்பு குறித்து உண்மையான அ.தி.மு.க.வினர் கேள்வி கேட்கவேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது பல வழக்குகள் போட்டார்கள். ஆனால் அதனை நிரூபிக்க முடியவில்லை. இதே எழுச்சியோடு நீங்கள் தி.மு.க.வை வெற்றிபெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story