நாகர்கோவிலில் சமையல் செய்யும்போது கேஸ் கசிந்து தீவிபத்து, கணவன், மனைவி 2 மகள்கள் கருகினர்
நாகர்கோவில் வடசேரியில் சமையல் செய்தபோது கேஸ் கசிந்து ஏற்பட்டு தீவிபத்தில், கணவன், மனைவி 2 மகள்கள் தீயில் கருகினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி அருகுவிளை சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிகண்ணு (41). அந்த பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சியில் லோடுமேனாக உள்ளார். இவருக்கு கவிதா (39) என்ற மனைவியும், லெக்சந்திரா (11), ஹன்சிகா(8) என்ற மகள்களும் உள்ளனர். கவிதா வீட்டில் சமையல் செய்வதற்கு காஸ் அடுப்பை ஆன் செய்துள்ளார். ஆனால் சிலிண்டரில் இருந்து அடுப்பிற்கு கேஸ் வரவில்லை.
இந்த நிலையில் வேலைக்கு சென்று இருந்த சாமிகண்ணு வீட்டிற்கு வந்துள்ளார். அடுப்பிற்கு கேஸ் வரவில்லை என்று சாமிகண்ணுவிடம் கவிதா கூறியுள்ளார். சாமிகண்ணு வீட்டில் இருந்த ஸ்குருடிரைவரை கொண்டு சிலிண்டர் வாய் பகுதியில் குத்தியுள்ளார். அப்போது சிலிண்டருக்குள் இருக்கும் வாசர் பகுதி சிறிது கழன்று,கேஸ் கசிந்துள்ளது. இதனை சாமி கண்ணுவும், அவரது மனைவியும் கவனிக்கவில்லை. பின்னர் ரெகுலேட்டரை சிலிண்டரில் பொறுத்தி அடுப்பை ஆன்செய்து சாமிகண்ணு தீவைத்துள்ளார். அப்போது சமையல் அறையில் பரவி இருந்த கேஸில் தீ பிடித்தது. தீபிடித்த வேகத்தில் சாமிகண்ணு மீதும் தீ பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சாமிகண்ணுவை காப்பாற்ற முயற்சி செய்தனர். இதில் அவர்கள் மீதும் தீ பரவியது. பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story