நெல்லையில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி; தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்


குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி; தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி; தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தினத்தந்தி 8 Jan 2021 4:54 AM GMT (Updated: 8 Jan 2021 4:54 AM GMT)

நெல்லையில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை டிராபிக் ராமசாமி தடுத்து நிறுத்தினார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிராபிக் ராமசாமி
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நெல்லை மாநகரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு, குறைபாடுகளை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் டிராபிக் ராமசாமி நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தார். அவர் மாநகரில் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ள சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நெல்லை மாநகராட்சியில் குப்பைகளை அள்ள பேட்டரி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி பெறவில்லை என்று கூறி போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளித்தார்.

திடீர் போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு தூய்மை பணியாளர்கள் பேட்டரியால் இயங்கும் வாகனங்களுடன் குப்பைகளை அள்ளுவதற்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த டிராபிக் ராமசாமி, பேட்டரி வாகனத்துக்கு பதிவு சான்று இருக்கிறதா? ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என்று தூய்மை பணியாளர்களிடம் கேட்டார்.

சாலை மறியல்
இதனால் ஆவேசம் அடைந்த தூய்மை பணியாளர்கள், சக தொழிலாளர்களுடன் இணைந்து அங்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், சந்திப்பு இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

சட்டவிரோத செயல்
இதுகுறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில் ‘சென்னையில் அனுமதியின்றி பேட்டரி பொருத்தப்பட்ட 3 சக்கர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளேன். ஆனால், நெல்லை மாநகராட்சியில் எந்தவித வாகன பதிவு சான்றும் பெறாமல், ஓட்டுனர் உரிமம் இன்றி பேட்டரி வாகனங்களை இயக்குகிறார்கள். இது சட்டவிரோதமான செயல் ஆகும். எனவே, சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த வாகனங்களை இயக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளேன்’ என்றார்.

போலீஸ் நிலையத்தில் புகார்
இதற்கிடையே, தமிழ்ப்புலிகள் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை தமிழரசு தலைமையில் தூய்மை தொழிலாளர்கள் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘தூய்மை தொழிலாளர்கள் உடல் நலன் கருதி பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் குப்பைகளை அள்ளுவதற்கு சென்ற தூய்மை பணியாளர்களை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களிடம் பொது இடத்தில் கடுமையாக நடந்து கொண்ட அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறிஉள்ளனர். இதுதொடர்பாக சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story