தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்


தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதி வழங்கும் கட்சியுடன் கூட்டணி மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 11 Jan 2021 2:10 AM GMT (Updated: 11 Jan 2021 2:10 AM GMT)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று திருச்சியில் நடந்த தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிரணி மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி மருதை தலைமை தாங்கினார். தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது, இல்லையெனில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது. விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். விவசாயத்திற்கான நீர் நிலை ஆதாரங்களை அதிகப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு 50 சதவீதம் கடன்

முல்லைப்பெரியாறு, கிருஷ்ணா, காவிரி, நதிகளின் நீரை அதிகளவு சேமிக்கும் வகையில் வைகை, மேட்டூர் அணையின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். வங்கிகளில் வியாபார கடன் வழங்குவதில் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் நலத்திட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடங்கள் ஒதுக்க வேண்டும். சிறு வியாபாரிகள் நல வாரியத்தை அமைக்க வேண்டும். ஆன்லைன் மருந்து வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது. ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடை செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் மாநாடு

முன்னதாக தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சுமார் 100 உட்பிரிவுகளில் செட்டியார்கள் இரண்டரை கோடி பேர் வசித்து வருகிறார்கள். செட்டியார்களின் பலத்தை நிரூபித்து காட்டுவதற்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி 10 லட்சம் பேரை திரட்டி மாபெரும் மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். வீரமங்கை கற்புக்கரசி கண்ணகிக்கு தமிழக அரசு சார்பில் மதுரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அதேபோல் கேரள பகுதியில் உள்ள கண்ணகி கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடத்துவதற்கு வசதியாக எல்லை பிரச்சினையை தமிழக அரசு கேரள அரசுடன் பேசி தீர்க்க வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் செட்டியார்களுக்கு எந்த அரசியல் கட்சி அதிக தொகுதிகளை குறிப்பாக 20 தொகுதிகளை ஒதுக்குகிறதோ அப்படி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது செட்டியார்கள் மக்கள் தொகையில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் பங்கேற்ற மகளிரணியினர் ஊர்வலமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடி மாநாட்டு அரங்கிற்கு வந்தனர். மாநாட்டில் கவுரவ தலைவர்கள் பார்மா கணேசன், ஜெயராமன் மற்றும் மாநில பொருளாளர் தமிழ்செல்வன், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நெய் ராஜா, டைமண்ட் ராஜா, மகளிர் அணி நிர்வாகிகள் கீதா ராமநாதன், சந்திரா ஜெகநாதன், சிவகாமி சுந்தரி, பானுப்பிரியா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story