கீழ்வேளூர் அருகே, மரப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 34 பவுன் நகைகள்- ரூ.4½ லட்சம் திருட்டு போலீசார் விசாரணை


கீழ்வேளூர் அருகே, மரப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 34 பவுன் நகைகள்- ரூ.4½ லட்சம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2021 2:31 AM GMT (Updated: 11 Jan 2021 2:31 AM GMT)

கீழ்வேளூர் அருகே மரப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 34 பவுன் நகைகள்-ரூ.4½ லட்சம் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தாஜிதீன் (வயது66). இவர் தனது வீட்டின் அருகே மரப்பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை தாஜிதீன் வீட்டில் இருந்து மரப்பட்டறைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். மேலும் இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நடைபெற்ற வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருந்த போது எப்படி மர்ம நபர்கள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story