முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: கருணாஸ் எம்.எல்.ஏ.


கருணாஸ் எம்.எல்.ஏ.
x
கருணாஸ் எம்.எல்.ஏ.
தினத்தந்தி 11 Jan 2021 6:37 AM GMT (Updated: 11 Jan 2021 6:37 AM GMT)

முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

கூடுதல் தொகுதி
முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். இதில் நிறுவன தலைவரும்,எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்துகொண்டு பேசினார். இதில் வருகிற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் தொடர்பாக எந்த முடிவை எடுக்கவும் தலைவர் என்ற முறையில் எனக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் எங்களுக்கு போட்டியிட ஒரு தொகுதி கிடைத்தது. இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி கேட்டு வலியுறுத்தப்படும். பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. சிறிய கட்சிகள், அமைப்புகளுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 26 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை திறந்து, கள்ளர், அகமுடையோர், மறவர் ஆகியோரை தேவர் இனம் என அறிவித்து, அரசாணை வெளியிட்டார்.அந்த அரசாணை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்ற வேண்டும்.

சசிகலா
அ.தி.மு.க. கட்சி என்பது முக்குலத்தோர் சமுதாய கட்சி என்ற அளவிற்கு இருந்து வருகிறது. வன்னியர் சமூகம் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறது. இதுபோல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரியாக கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து தெரிந்தோ, தெரியாமலோ பேசியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பது தான் நாகரீகமாக இருக்கும்.

சசிகலா விடுதலையாகி வருவதை எங்கள் சமுதாயம் மற்றும் அ.தி.மு.க.வில் இருக்க கூடிய உண்மையான விசுவாசிகள் வரவேற்பார்கள். ஆனால் அவர் வருகையால் கட்சியில் பிரச்சினைகள் ஏற்படுமா? என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது.

ஒருவேளை சசிகலா அந்த கட்சிக்கு உழைத்தது உண்மையென்றால், நிச்சயமாக அவர்களை பிடித்தவர்கள் அவர்களுக்கான ஆதரவை கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story