மொபட் மீது டிராக்டர் மோதி கவிழ்ந்ததில் சாவு: பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


மொபட் மீது டிராக்டர் மோதி கவிழ்ந்ததில் சாவு: பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jan 2021 1:00 AM GMT (Updated: 12 Jan 2021 1:00 AM GMT)

மொபட் மீது டிராக்டர் ேமாதி கவிழ்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கைது செய்யக்கோரிக்கை விடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அஞ்சலை(வயது 32). இவர்களுக்கு மாலதி(11) என்ற மகள் இருக்கிறாள். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அஞ்சலை கூலி வேைலக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு வழக்கம்போல் வேலை முடிந்த பின்னர், பரமசிவம் என்பவருடன் மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். புதூருக்கும், நெய்குப்பைக்கும் இடையே வந்தபோது, அந்த வழியாக 15 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர், மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அஞ்சலையும், பரமசிவமும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது அஞ்சலை சாலையோர குட்டையில் உள்ள தண்ணீரில் விழுந்ததாக தெரிகிறது. அவர் மீது டிராக்டரும் கவிழ்ந்து கிடந்ததில், அஞ்சலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இந்நிலையில், டிராக்டரை ஓட்டி வந்த சிறுவன் தரப்பினர், அஞ்சலை குட்டையில் மூழ்கி உயிரிழந்தார் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே அஞ்சலையின் உடலை வி.களத்தூர் போலீசார் கைப்பற்றி, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அஞ்சலையின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனை அருகே பெரம்பலூர்-துறையூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அஞ்சலையின் சாவுக்கு காரணமான சிறுவனை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், ஏற்கனவே தந்தையை இழந்து, தற்போது தாயையும் இழந்து அனாதையான மாலதிக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், செந்தில்குமார், கலா, சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள், அஞ்சலையின் உடலை மருத்துவமனையில் இருந்து ெபற்றுச்சென்றனர்.

Next Story