கொட்டாரம் அருகே கால்வாயில் உடைப்பு பொற்றையடி- மயிலாடி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு


கொட்டாரம் அருகே கால்வாயில் உடைப்பு பொற்றையடி- மயிலாடி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2021 3:17 AM GMT (Updated: 14 Jan 2021 3:17 AM GMT)

கொட்டாரம் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பொற்றையடி-மயிலாடி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியை தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.

நாகர்கோவில், 

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பின.

கொட்டாரம் அருகே பொற்றையடியில் இருந்து மயிலாடி செல்லும் சாலைேயாரத்தில் நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கடைவரம்பு பகுதியான குமரிசால் குளத்துக்கு செல்கிறது.

கால்வாயில் உடைப்பு

இந்த கால்வாயின் குறுக்கே உசரவிளை பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் பாலம் பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சாலைபுதூர், உசரவிளை, லட்சுமிபுரம், குலசேகரபுரம், கோட்டைவிளை ஆகிய 5 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதுபற்றி குலசேகரபுரம் பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி, கன்னியாகுமரி போலீசாருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

தளவாய்சுந்தரம் நடவடிக்கை

தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு பாலத்தின் இரு பகுதியிலும் சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகளை அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ெகாட்டும் மழையை பொருட்படுத்தாமல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கால்வாய் உடைப்பு ஏற்ட்ட பகுதியை பார்வையிட்ட அவர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனே சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் அதுதொடர்பான நடவடிக்கையும் எடுக்கும்படி கூறினார்..

மேலும், தி.மு.க. சார்பில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். 

Next Story