எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்
x
தினத்தந்தி 15 Jan 2021 1:07 AM GMT (Updated: 15 Jan 2021 1:07 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் கூறினார்.

வேலூர், 

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் பள்ளி திறப்பதற்கு முன்பாக செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், பள்ளியில் கடைபிடிக்க வேண்டியவைகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறியதாவது:-

அனைத்து ஆசிரியர்களும் வரவேண்டும்

பள்ளிகளில் அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க கூடிய ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும்.

வகுப்பு நடத்தக்கூடிய ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் வெளியே நடமாடாமல் கண்காணிக்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளி

எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் பள்ளியில் ஓன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும் இறைவணக்கம், உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது. தனியார் பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும்.

வகுப்பறையில் மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமர வைக்க வேண்டும். ஒரு மாணவர் இருந்த இடத்தில் மறுநாள் மற்றொரு மாணவரை அமர வைக்க கூடாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.

கூட்டத்தில், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜன், மேல்நிலை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Next Story