கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி; பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியல்


வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதை படத்தில்; மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது; தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி
x
வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதை படத்தில்; மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது; தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி
தினத்தந்தி 15 Jan 2021 9:15 PM GMT (Updated: 15 Jan 2021 7:01 PM GMT)

கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பருவமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது.பருவமழை முடிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மக்கள் அவதி
இரவு, பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது. மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் மழை வெள்ளம் தேங்கியதாலும், ஸ்மார்ட்சிட்டி சாலை பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பிரையண்ட்நகர் வழியாக சுற்றி சென்று வருகின்றன. பிரையண்ட்நகர் பகுதியிலும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அதே போன்று திருச்செந்தூர் ரோடு, சிவந்தாகுளம் ரோடு சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது அங்கு சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் கழிவுநீரில் வாகனத்துடன் விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பக்கிள்புரம் வழியாக சென்று வருகின்றனர்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
தூத்துக்குடியில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மேடான பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று உள்ளனர். பல ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் ஏராளமான மக்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு 
வருகின்றனர். தூத்துக்குடி மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.

சாலை மறியல்
தூத்துக்குடி தனசேகர்நகர், முத்தம்மாள்காலனி, ஸ்டேட்வங்கி காலனி, செல்வநாயகபுரம், லூர்தம்மாள்புரம், குறிஞ்சிநகர், செயிண்ட்மேரிஸ் காலனி, பிரையண்ட்நகர் உள்பட பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் காட்சி அளித்தது. இந்த மழைநீரை விரைந்து அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு, பிரையண்ட்நகர், கட்டபொம்மன் நகர், எட்டயபுரம் ரோடு ஆகிய 4 இடங்களில் மழைநீரை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

குடியிருப்புகளில் வெள்ளம்
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி பாரதிநகர் பகுதி வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பயிரிடப்பட்ட வாழை கன்றுகள் மற்றும் நெற்பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.இதனால் கவலையடைந்த விவசாயிகள், வயல்களில் அதிகப்படியாக தேங்கிய மழை நீரை, மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். அதுபோல முத்தையாபுரம் பெரியார் நகர் பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் யாரும் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதமும் ஏற்படவில்லை. குமாரசாமி நகர், பாரதி நகர், முனியசாமி கோவில் தெரு, முத்துநகர்உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்

பஸ் போக்குவரத்து நிறுத்தம்
சாயர்புரம் வட்டாரத்தில் சிவத்தையாபுரம், நடுவக்குறிச்சி புளியநகர், செந்தியம்பலம், கட்டாலங்குளம், நட்டாத்தி, முள்ளன்விளை, குமாரபுரம் கோவங்காடு, மஞ்சள்நீர் காயல், சுப்பிரமணியபுரம், திருப்பணி செட்டிகுளம், ராமசாமிபுரம், வலசைகாரன்விளை, சேர்வைகரன்மடம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் கட்டாலங்குளத்தில் உள்ள வேப்பங்குளம், நெடுங்குளம், புதுக்குளம் நிரம்பி உபரி தண்ணீர் வெளியே வருகிறது. இதனால் முள்ளன்விளை ஓடையில் தண்ணீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. நட்டாத்தியிலிருந்து இருந்து பண்டாரவிளை செல்லும் சாலையில் காட்டு வெள்ளம் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம், 
பெருங்குளம், ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் திருப்பணி செட்டிகுளம் உள்ள செட்டிகுளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. மேலும் காட்டு வெள்ளம் செல்லும் சாலையில் சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம் அருள்ராஜ், தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேர்மன் அருணாசலசுவாமி கோவிலில் வெள்ளம்
ஏரல் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சேர்மன் அருணாசலசாமி கோவிலை நேற்றுமுன்தினம் வெள்ளம் சூழ்ந்தது. கோவில் நுழைவு வாயில் பகுதியில் தண்ணீர் தேங்கியது. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் கோவிலுக்கு வரும் பக்தர்களை மாற்று வழியான திருவழுதிநாடார்விளை ஊர் வழியாக அனுப்பி வைத்தனர். நேற்று காலையில் படிப்படியாக நுழைவாயிலில் உள்ள தண்ணீர் வடிந்து போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்று ஓரத்தில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் வாழைகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நேற்று முன்தினம் ஏரல் தாம்போதி பழைய பாலம் தண்ணீரில் மூழ்கியது.பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஓடுவதால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று 3- வது நாள் ஆகியும் தண்ணீர் குறையாமல் தாம்போதி பாலம் மூழ்கடித்து செல்கிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து 

செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் யாரும் பாலத்துக்கு சென்றுவிடாமல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஆழ்வார்தோப்பு
தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆழ்வார்தோப்பு பாலத்தின் மேல் மட்டத்தை வெள்ளம் தொட்டு செல்கிறது. மேலும் ஆழ்வார்தோப்பில் தாழ்வான தெருக்களில் ஆற்றிலிருந்து 

ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல் சிவராமமங்கலம் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மாவட்ட அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர்-39, காயல்பட்டினம்- 40, குலசேகரன்பட்டினம் -33, விளாத்திகுளம்- 16, காடல்குடி- 5, வைப்பார்- 17, சூரங்குடி- 20, கோவில்பட்டி- 22, கழுகுமலை- 12, கயத்தாறு- 24, கடம்பூர்- 22, ஓட்டப்பிடாரம்- 19, மணியாச்சி- 35, வேடநத்தம்- 15, கீழஅரசடி- 12, எட்டயபுரம்- 29, சாத்தான்குளம்- 37.2, ஸ்ரீவைகுண்டம்- 51, தூத்துக்குடி-40.

Next Story