அரக்கோணத்தில், பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற 2 பேர் துப்பாக்கி முனையில் கைது - கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்

அரக்கோணத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் உள்பட 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஒரு காரில் அரக்கோணம்-காவனூர் சாலை வழியாக வருவதாக நேற்று மாலை அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீஸ்காரர் ராஜேஷ்கண்ணன் சம்பந்தப்பட்ட சாலைக்குச் சென்று ஓரிடத்தில் நின்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் ஹவுசிங் போர்டு, சுவால்பேட்டை வழியாக அரக்கோணம் ரெயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் கீழே இறங்கி துப்பாக்கி முனையில் அந்தக் காரை மடக்கினார்.
கார் திடீரென நின்றதும், அதில் வந்தவர்களை கீழே இறக்கி பார்த்தபோது, அவர்கள் முன்னாள் கொலை குற்றவாளியான சசிக்குமார் (வயது 26) என்றும், திருத்தணியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சற்குணம் (24) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தலையில் ஏற்பட்ட காயத்துடன் அவதிப்பட்ட சசிக்குமாரை சிகிச்சைக்காக போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் சோதனை செய்தபோது, அதில் பட்டா கத்தி, இரும்புக்கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் மற்றும் பல்வேறு கட்சி கொடிகள், வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் எம்பளம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஆகியவைகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து மேற்கண்ட பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story