திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம்


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 Jan 2021 2:57 AM GMT (Updated: 17 Jan 2021 2:57 AM GMT)

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

திருவாரூர், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நாடு முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை, அடியக்கமங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பண்ணையூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை போலீஸ் சூப்பிரண்டு துரை தொடங்கி வைத்தார். அதுசமயம் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதா, மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

5 மையங்கள்

இந்த தடுப்பூசி போடுவதற்காக மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் சுமார் 1184-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் இணைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட பயனாளிகளில் நேற்று முதல் கட்டமாக 400 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.. தடுப்பூசி போடப்பட்ட பயனாளிகள் அடுத்த 28 நாட்களில், இதே தடுப்பூசியை 2-வது முறையாக போடப்படுகிறது.

தற்போது 18 வயதுக்குட்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி அளிக்கப்படமாட்டாது. தேவையான தடுப்பூசி மாநில வைப்பகத்தில் இருந்து பெறப்பட்டு மாவட்ட குளிர்பதனிடும் தடுப்பூசி வைப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

செல்போனுக்கு குறுஞ்செய்தி

தடுப்பூசி பெரும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தடுப்பூசி போட வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவைகளும், தடுப்பூசி கிடைக்கபெற்ற பின் அடுத்த தடுப்பூசி பெற வேண்டிய தேதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக அனுப்படும். இதனை தொடர்ந்து சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போட 100 மையங்கள் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். தடுப்பூசி ஏதேனும் சிறு பக்க விளைவு ஏற்பட்டாலும் உடனடியாக கவனிப்பதற்கு அனைத்து நிலையங்களிலும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர்.

Next Story