சேரன்மாதேவி அருகே மழைக்கு வீடு இடிந்து 2 பேர் பலி


சேரன்மாதேவி அருகே வடக்கு காருகுறிச்சியில் மழைக்கு வீடு இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
x
சேரன்மாதேவி அருகே வடக்கு காருகுறிச்சியில் மழைக்கு வீடு இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 17 Jan 2021 8:30 PM GMT (Updated: 17 Jan 2021 6:20 PM GMT)

நெல்லை அருகே மழைக்கு வீடு இடிந்து 2 பேர் பலியானார்கள்.

வீடு இடிந்தது
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள வடக்கு காருகுறிச்சி கீழ கிராமம் தெருவை சேர்ந்தவர் முத்தையா என்பவருடைய மனைவி லட்சுமி (வயது 85). இவர் தனது மகன் ஆறுமுக நயினார் (47), மருமகள் முத்துலட்சுமி (37), பேத்தி நாகஜோதி (17), பேரன் மணிகண்டன் (14) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தவிர மற்ற 4 பேரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக தொடர் மழை பெய்ததால் லட்சுமியின் வீடு ஈரப்பதத்துடன் பலவீனமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் லட்சுமி, ஆறுமுக நயினார், முத்துலட்சுமி நாகஜோதி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

மூதாட்டி பரிதாப சாவு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் வரதராஜன் தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 4 பேரையும் மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

மற்ற 3 பேரும் லேசான காயங்களுடன் சேர்க்கப்பட்டதால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்
நெல்லையை அடுத்த சுத்தமல்லி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் சுப்பையா (78). இவர் கடந்த 15-ந்தேதி அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள காந்தியா பிள்ளை என்பவருடைய வீட்டை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக தற்போது பெய்த கனமழையில் அவரது வீட்டு மண்சுவர் சரிந்து சுப்பையா மேல் விழுந்தது. இதில் அவரது வலது கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுப்பையா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வீடு இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story