கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெரம்பலூர் மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்


பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது
x
பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது
தினத்தந்தி 17 Jan 2021 8:53 PM GMT (Updated: 17 Jan 2021 8:53 PM GMT)

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை பள்ளிகள் திறப்பு
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து மூடப்பட்டன. பின்னர் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. மேலும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக அரசு பள்ளிகளை திறக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் பள்ளிக்கூடங்களை பொங்கல் பண்டிகை விடுமுறை கழித்து திறப்பது குறித்து அந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டங்களை அரசு நடத்தியது. அதில் பள்ளிகள் திறக்க சம்மதம் தெரிவித்து ஏராளமான பெற்றோர் கருத்து தெரிவித்ததால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) 10, 12-ம் வகுப்புகளுக்காக, அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார்.

கை தூய்மைப்படுத்தும் நவீன எந்திரம்
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 147 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் 180 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால், அந்தந்த பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளும், பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகளும், வகுப்பறையில் இருக்கைகள் ஏற்பாடு வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வகுப்பறைகளுக்கு செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க, தெர்மல் ஸ்கேனர் கருவிகளும் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்கு பள்ளிகளின் முன்பு கை தூய்மைப்படுத்தும் நவீன எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த எந்திரத்தில் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்த பின்னரே, வகுப்பறைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவ-மாணவிகள்
பள்ளிக்கு கட்டாயமாக மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. 

சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு வகுப்பறைக்கு 25 மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட இருப்பதால், அவர்களுக்கான இருக்கைகளை ஒழுங்குப்படுத்தும் பணியில் நேற்று ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 

மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகள் கை கழுவும் இடங்களில் சோப்பு, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. 

மாணவ-மாணவிகளுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படவுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் மணக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனந்தவாடி, இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

Next Story