ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த காட்டு யானை சாவு


ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த காட்டு யானை சாவு
x
தினத்தந்தி 18 Jan 2021 2:13 AM GMT (Updated: 18 Jan 2021 2:13 AM GMT)

ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு, போடூர்பள்ளம், பேரண்டப்பள்ளி வனப்பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 40 வயதுடைய ஆண் யானை ஒன்று, கடந்த 15-ந் தேதி இரவு பேரண்டப்பள்ளி அருகே ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய ெநடுஞ்சாலையை கடக்க முயன்றது.

அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி காட்டு யானை மீது மோதியது. இதில் யானை படுகாயம் அடைந்தது. 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.அங்கு யானைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

பரிதாப சாவு

மேலும் பெங்களூருவில் இருந்து சிறப்பு மருத்துவ குழு வந்து சிகிச்சை அளித்தனர். லாரி மோதியதில் கால் எழும்புகள் உடைந்த நிலையிலும், வால் பகுதியில் காயம் அடைந்த நிலையில் சிரமப்பட்ட யானை படுத்த படுக்கையாக இருந்தது.

உணவு எதையும் சரியாக உட்கொள்ளாமல் இருந்த யானை நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக செத்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

தொடரும் இறப்புகள்

ஓசூர் அருகே கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரண்டப்பள்ளியில் கார் மோதி குட்டி யானை பலியானது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சூளகிரி அருகே அரசு விரைவு பஸ் மோதி யானை ஒன்று பலியானது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் லாரி மோதி யானை படுகாயம் அடைந்தது. அதன் பிறகு தற்போது கடந்த 15-ந் தேதி விபத்தில் சிக்கிய யானை இறந்துள்ளது.

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வன விலங்குகள் அடிக்கடி கடக்க கூடிய பகுதியில் இயற்கை மேம்பாலம் அமைக்கும் திட்டம் முன்பே அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. அந்த மேம்பாலம் அமையும் பட்சத்தில் வன விலங்குகள் மீது வாகனங்கள் மோதி இறப்பதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story