குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 Jan 2021 12:38 AM GMT (Updated: 21 Jan 2021 12:38 AM GMT)

குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்,

குடியரசு தின விழா நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 26-ந் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு வருகைதரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குடிநீர் வசதி

நாகர்கோவில் மாநகராட்சி மூலம் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

விழாவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் தீயணைப்புத்துறை மூலம் தீயணைப்புக் கருவிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆபத்துக்கால வாகனங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

வருவாய்த்துறை, சமூகபாதுகாப்புத்திட்டம், சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பிறதுறைகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைப்பு

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட வருவாய் அதிகாரி கண்காணிக்க வேண்டும். விழாவில் ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும் விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சிரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story