திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 23 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள்; இறுதிப்பட்டியல் வெளியீடு
திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 வாக்காளர்கள் இடம் உள்ளனர்.
இறுதிப்பட்டியல் வெளியீடு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நேற்று கூட்டரங்கில் கலெக்டர் எஸ்.சிவராசு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது;-
நீக்கம், சேர்த்தல்
கடந்த ஆண்டு (2020) நவம்பர் 16-ந் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 22, 60, 439 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். பின்னர், நடைபெற்ற தொடர் திருத்தத்தின்போதும், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திலும் பட்டியல் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவற்றில் இரட்டைப் பதிவு, முகவரி மாற்றம், மரணமடைந்தோர் அடிப்படையில் 7, 648 பேர் நீக்கப்பட்டுள்ளனர். திருவெறும்பூர், பொன்மலை பகுதிகளிலும் மற்றும் பெல் நிறுவனம், பாதுகாப்பு தொழிற்சாலை, ரெயில்வே பணிமனைகளில் பலர் இடம்மாறி சென்று விட்டதால், அரசியல் கட்சிகள் அளித்த மனுக்களின்படி விசாரணை நடத்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 80, 095 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 35, 885 பேர் 18 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள்.
23 லட்சத்து 32 ஆயிரம்
இறுதி வாக்காளர் பட்டியலின்படி 9 சட்ட மன்ற தொகுதிகளிலும் 11, 33, 020 ஆண் வாக்காளர்கள், 11, 99, 635 பெண் வாக்காளர்கள், 231 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 பேர் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 66, 615 பேர் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் 3.71 சதவீத வாக்காளர்கள்
கூடுதலாக இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
தொடர்ந்து திருத்தம்
மேலும் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், தேர்தல் தாசில்தார் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.