கோபி அருகே பரபரப்பு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து விவசாயிகள் சாலைமறியல்


கோபி அருகே பரபரப்பு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Jan 2021 5:59 PM GMT (Updated: 21 Jan 2021 5:59 PM GMT)

கோபி அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த விவசாயிகள், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப்பகுதிகள் தடப்பள்ளி- அரக்கன் கோட்டை மற்றும் கீழ்பவானி வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது நெல் பயிர் நன்கு வளர்ந்து அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசு வாணிபக்கழகத்தின் சார்பில் 22 இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்றவை மூடப்பட்டுள்ளது.

லாாி சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று கூகலூர் பகுதியில் நெல் மூட்டைகளுடன் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்ததும் விவசாயிகள் சிலர் அங்கு சென்று அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். உடனே லாரியில் இருந்த 2 பேர் இறங்கி தப்பி ஓடினர். டிரைவர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் கேட்டபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல் வாங்கிக்கொண்டு கோபி பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோபி-கூகலூர் ரோட்டில் சாலை மறியலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பறிமுதல்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘தற்போது வரை கோபி பகுதியை சேர்ந்த சில நெல் வியாபாரிகள் திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரூர், ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு நெல் வாங்கி வந்து கோபி பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் சட்டத்துக்கு புறம்பாக நெல் கொள்முதல் செய்வோர் மீதும், சான்றுகள் வழங்கும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் அதனை கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் கொண்டு் சென்று நிறுத்தினர்.

Next Story