பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2021 10:39 PM GMT (Updated: 21 Jan 2021 10:39 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவருமான ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டிற்கு முழு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணம் வழங்க வேண்டும்

மழையால் இடிந்த வீடுகள் மற்றும் கால்நடைகள், மனித உயிரிழப்புகள் குறித்து முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ராமையன், தம்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாலதி, மாநகர செயலாளர் குருசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, நிர்வாகிகள் ராஜன், வசந்தி, சாந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story