தஞ்சை பெரியகோவிலுக்கு சுற்றுலா வந்த சென்னை டாக்டர் குடும்பத்தினரிடம் 12½ பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை


தஞ்சை பெரியகோவிலுக்கு சுற்றுலா வந்த சென்னை டாக்டர் குடும்பத்தினரிடம் 12½ பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Jan 2021 8:45 AM IST (Updated: 24 Jan 2021 8:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலுக்கு சுற்றுலா வந்த சென்னை டாக்டர் குடும்பத்தினரிடம் 12½ பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

சென்னை அய்யனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு கிறிஸ்டோபர். டாக்டரான இவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு சென்றார்.

அங்கு பிரார்த்தனையை முடித்துவிட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா கோவிலுக்கு செல்வதற்காக நேற்று காலை வேளாங்கண்ணியில் இருந்து அனைவரும் வேனில் புறப்பட்டனர்.

தஞ்சை பெரியகோவிலுக்கு...

பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் தஞ்சை பெரியகோவிலுக்கு அவர்கள் நேற்று பிற்பகல் வந்தனர். ஜெரால்டு கிறிஸ்டோபர் மற்றும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரியகோவிலுக்குள் சென்று சுற்றி பார்த்தனர்.

பின்னர் அவர்கள் வராஹி அம்மன் சன்னதியின் பின்புறம் அமர்ந்து இருந்தனர். அப்போது தாங்கள் கொண்டு வந்த பைகளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

12½ பவுன் நகைகள் திருட்டு

பின்னர் நேரம் ஆனதால் அவர்கள் அனைவரும் கோவிலில் இருந்து புறப்பட்டு வெளியே வந்து வேனில் ஏறினர். அப்போதுதான் அவர்கள் கொண்டு வந்த பைகளில் ஒரு பையை மட்டும் காணாதது தெரிய வந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே தாங்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கேயும் பையை காணவில்லை. அந்த பையில் 12½ பவுன் நகை இருந்ததாக டாக்டர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவர்கள் பையின் நிறம் குறித்து தெரிவித்தபோது, யாரோ ஒரு பெண் அந்த பையை தோளில் போட்டுக் கொண்டு சென்றதாக சிலர் தெரிவித்தனர். இதனால் அந்த பெண், பையுடன் நகையை திருடிச் சென்று இருக்கலாம் என தேடிப்பார்த்தபோது அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை

இது குறித்து பெரியகோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் பெரியகோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய நினைத்தபோது, பல கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது தெரிய வந்தது. உடனே பெரியகோவில் சாலை, ராஜராஜசோழன் சிலை, மேம்பாலம் ஆகிய பகுதிகளில் போலீஸ்துறையின் சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகைப்பையுடன் சென்ற பெண்ணின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பதை பார்க்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி ஜெரால்டு கிறிஸ்டோபரை போலீசார் அழைத்து கொண்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி நகையுடன் பையை எடுத்த சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Next Story