சட்டவிரோதமாக தங்கி இருந்தனர் சென்னை விமான நிலையத்தில் இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது


சட்டவிரோதமாக தங்கி இருந்தனர் சென்னை விமான நிலையத்தில் இலங்கை தமிழர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 3:07 AM GMT (Updated: 2 Feb 2021 3:07 AM GMT)

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தமிழர் உள்பட 4 பேரை சென்னை விமான நிலையத்தில் கியூபிராஞ்ச் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்திருந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனா்.

அந்த நேரத்தில் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான சென்னை கியூ பிராஞ்ச் தனிப்படையை சேர்ந்த 5 போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினா் மற்றும் மத்திய உளவுத்துறையினர் சிறப்பு அனுமதி பெற்று, உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்தனா்.

அப்போது டெல்லி விமானத்தில் செல்ல இருந்த குணசேகரன்(வயது 45) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரது விமான பயணத்தை ரத்து செய்த கியூபிராஞ்ச் போலீசார், அவரை கைது செய்து சென்னையில் உள்ள கியூபிராஞ்ச் தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துசென்றனர்.

இலங்கை தமிழர்

விமான நிலையத்தில் கைதான குணசேகரன், இலங்கையை சோ்ந்த தமிழர் ஆவர். இவர் அளித்த தகவலின்பேரில் கென்னடி உள்பட மேலும் 3 பேரையும் மத்திய உளவுத்துறை போலீசார் கைது செய்து கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இவர்கள் 4 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதாகவும், இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவா்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இலங்கையில் போதை பொருள் கடத்தல் தாதாவின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்று 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story