நாகை அருகே பனைமேடு பகுதியில் வேகத்தடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


நாகை அருகே பனைமேடு பகுதியில் வேகத்தடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Feb 2021 5:59 AM GMT (Updated: 14 Feb 2021 5:59 AM GMT)

நாகை அருகே சிக்கல் பனைமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிக்கல், 

நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பனைமேடு தூங்குமூஞ்சி மரம் அருகே தெற்குவெளி பகுதிக்கு செல்லும் சாலையில் திடீரென்று வேகத்தடை ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டது. இதில் ஒளிரும் விளக்குகளோ, வர்ணமோ பூசப்படவில்லை. மேலும் எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை.

இந்த சாலை வழியாக சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா ஆகியவைக்கு தினமும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் கடந்த ஒருவாரமாக தினமும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வேகத்தடையினால் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை இந்த வேகத்தடையால் கீழே விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சாலை மறியல்

இந்த வேகத்தடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், கலியபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வேகத்தடையை அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை- திருவாரூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story