திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது


திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால், ஐ.டி. நிறுவன ஊழியர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 4 March 2021 1:19 AM GMT (Updated: 4 March 2021 1:19 AM GMT)

திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் ஐ.டி. நிறுவன ஊழியர் தனது கை நரம்பை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

ஐ.டி. நிறுவன ஊழியர்
மதுரை புதிய சிறைச்சாலை தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மகன் விவேக் (வயது 30). இவர், சென்னை தியாராயநகரில் தனது நண்பருடன் தங்கி, வேளச்சேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இவருக்கு அடிக்கடி ஒற்றை தலைவலி வரும் என்று தெரிகிறது. இதற்கிடையில் அவரது பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தனர்.

கையை அறுத்து தற்கொலை
அதற்கு விவேக் தனக்கு அடிக்கடி ஒற்றை தலைவலி வருவதால் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லை என்று தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். ஆனால் அவரது பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைப்பதில் மும்முரமாக இருந்து பெண் தேடி வந்தனர். திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் வாழ்கையில் விரக்தியடைந்த விவேக், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அடுத்துள்ள திருவிடந்தை சவுக்கு தோப்பு பகுதிக்கு சென்று அங்கு தனது கை நரம்பை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான கடிதம்
தகவல் அறிந்து அங்கு சென்ற மாமல்லபுரம் போலீசார், விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவரது சட்டையில் பையில் இருந்து போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர், “எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எனது தற்கொலை முடிவுக்கு பெற்றோர் என்னை மன்னிக்க வேண்டும். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story