கோவை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க தி.மு.க. வேட்பாளர்கள் நேரடி மோதல்
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் அ.தி.மு.க-தி.மு.க. நேரடியாக மோதும் 7 தொகுதிகள் விவரம் வருமாறு:-
கோவை தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் காங்கேயத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.
கவுண்டம்பாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் தற்போதைய கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராமும், அவரை எதிர்த்து அந்த தொகுதியின் தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் களம் காண்கிறார்.
கோவை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தற்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள அம்மன் அர்ச்சுனன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் வ.ம.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.
மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் டி.ஆர்.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார்.
பொள்ளாச்சியில் அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் டாக்டர் வரதராஜனும் போட்டியிடுகிறார்.
கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.தாமேதரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். இந்த 7 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும் தி.மு.க. வும் நேரடியாக மோதுகின்றன.
மீதமுள்ள 3 தொகுதிகளான கோவை தெற்கு அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார்.
அந்த தொகுதி தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான கொ.ம.தே.க. சார்பில் பிரிமியர் செல்வம் போட்டியிடுகிறார். வால்பாறை (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அமுல் கந்தசாமி போட்டியிடுகிறார்.
இந்த தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. வால்பாறை, கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளுக்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அதிகாரபூர்வமாக தங்களது வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை.
Related Tags :
Next Story