“குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி


“குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 3 April 2021 12:50 AM GMT (Updated: 3 April 2021 12:50 AM GMT)

“குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” என்று சைதை துரைசாமியின் குற்றச்சாட்டுக்கு, மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

சென்னை, 

சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி, தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் குறித்து சில குற்றச்சாட்டுகளை நேற்று முன்தினம் முன்வைத்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளருமான மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை கிண்டி சிட்கோ இடத்தில் 1100 சதுரஅடியில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு வீடு வாங்கப்பட்டது. இதில் 1995-ம் ஆண்டில் இருந்து வசித்து வருகிறேன். 2005-ம் ஆண்டு பெருமழையால் அந்த வீடு இடிந்துபோனது. அதையடுத்து அந்த வீட்டை மாற்றியமைத்து கட்டினேன். சொத்து விவரங்கள் குறித்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், வீட்டின் மேற்கூரைதான் என்னுடைய சொத்து என்றும், அடிமனை சிட்கோவுக்கு சொந்தமானது என்றும்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

நற்பெயருக்கு களங்கம்

இது எனக்கு மட்டுமல்ல. என்னோடு சேர்ந்த 252 பேருக்கும் இதே நிலைதான். அந்த இடத்தை சொந்த மாக்கித்தர சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சிலருக்கு அதற்கான ஆவணங்களும் கொடுக்கப்பட்ட நிலையில், 2001-ல் அதுதொடர்பாக ஒரு வழக்கு போடப்பட்டது. 2011-ல் அந்த இடத்துக்கு ரூ.55 லட்சம் கொடுங்கள் என்று கூறினார்கள். அதுகுறித்தும் கோர்ட்டில் வழக்கு உள்ளது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் சிட்கோ இடத்தை அபகரித்துவிட்டார் என்று என்னை பற்றி சைதை துரைசாமி சொல்கிறார். 1100 சதுர அடி அதையும் நான் பிரமாண பத்திரத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க துரைசாமி அப்படி சொல்கிறார். அவருடைய தரம் அவ்வளவுதான்.

அரசியலை விட்டு விலகத்தயார்

கண்ணனின் வாரிசு காஞ்சனா (மா.சுப்பிரமணியன் மனைவி) என்று ரேஷன் கார்டில் திருத்தியிருப்பதாக கூறுகிறார். ரேஷன் கார்டு மற்றும் சிவில் சப்ளை துறையில் எந்த ஆவணங்களிலாவது என் மனைவியின் தந்தைபெயர் சாரங்கபாணி என்பதற்கு பதிலாக கண்ணன் என்று இருந்தால் நான் அரசியலில் இருந்து விலகத்தயார்.

போலி ஆவணங்கள் மூலம் என்னுடைய மனைவி பெயரில் வீட்டை மாற்றிக்கொடுங்கள் என்று நான் மனு கொடுத்ததாக எந்த அதிகாரியாவது சொன்னாலும் அரசியலை விட்டு விலகத்தயார். இன்னும் 2 நாட்களில் அதற்கான அசல் ஆவணங்களை சமர்ப்பித்தால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் அப்படி அவர் சமர்ப்பிக்கவில்லையென்றால், தேர்தலில் இருந்து அவர் விலகத்தயாராக இருக்கிறாரா?. நான் போட்டிக்குத்தயார்.

குறுக்கு வழியில்...

அதேபோல், குறுக்கு வழியில் வெற்றி பெற தி.மு.க. முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார். நான் 130 மணி நேரம் குறுக்கு சந்து, வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தேன். அதைத்தான் அவர் குறுக்கு வழியில் என்று சொல்கிறார் என நினைக்கிறேன். குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. மேலும் போலி ஆவணங்கள் தயாரித்து வாக்களிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். போலி ஆவணங்களை எங்கே தயாரிக்கிறோம்?.

சைதாப்பேட்டை தொகுதியில் பசுமை சைதை என்ற பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை என்னுடைய சொந்த பணத்தில் செய்து வருகிறேன். இதுவரை சைதாப்பேட்டையில் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன். 998 தெருக்களில் எப்படி இவ்வளவு மரக்கன்றுகளை நடமுடியும் என்று கேட்டுள்ளார். மே மாதம் 2-ந்தேதிக்கு பிறகு அவர் சும்மாதான் இருப்பார். அப்போது அவர் சைதாப்பேட்டை தொகுதியில் நட்டு வைத்த மரக்கன்றுகளை பார்க்கட்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்...

நான் சிட்கோ இடத்தை அபகரிப்பு செய்ததாக கூறும் சைதை துரைசாமி மீது, பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் இருக்கிறது. அதற்கான ஆதாரங்களும் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த புகார்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. தன்னை கூப்பிட்டதாக சைதை துரைசாமி அவராகவே “பில்டப்” செய்து கொள்கிறார். தோல்வி பயத்தின் வெளிப்பாடு காரணமாக எதையாவது சொல்லி வருகிறார். சைதாப்பேட்டை வரலாற்றில் அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி என்ற வரலாறு இந்த தேர்தலில் வரும். மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story