‘மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவன் நான்’ சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் வீதி, வீதியாக பிரசாரம்


‘மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவன் நான்’ சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் வீதி, வீதியாக பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2021 4:30 AM GMT (Updated: 5 April 2021 4:30 AM GMT)

சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்த மா.சுப்பிரமணியன், மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்குகொள்கிறேன் என்று பேசினார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் வீதி, வீதியாக நடந்து சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அந்தவகையில் சைதாப்பேட்டை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் மா.சுப்பிரமணியன் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இடைவிடாமல் தொகுதி முழுவதும் திறந்த ஆட்டோவில் வலம் வந்து வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டம்

காலை 7 மணிக்கு அப்துல் ரசாக் தெருவில் தொடங்கி, திடீர்நகர், கிழக்கு ஜோன்ஸ் சாலை, காரணித்தோட்டம், சி.ஐ.டி.நகர் முதன்மைச் சாலை, அண்ணாசாலை, சின்னமலை, வேளச்சேரி சாலை என தொகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்தார்.பின்னர் மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை மேற்கு பகுதி சாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

நான் கடந்த 20 நாட்களாக நடந்து சென்றும், 3 நாட்களாக ஆட்டோவில் சென்றும் வாக்கு சேகரித்து வருகிறேன். 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சைதாப்பேட்டை பகுதிக்குட்பட்ட அடையாறு கரையோரத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் அரசு எந்திரங்கள் விரைந்து செயல்படவில்லை.

கூப்பிட்ட குரலுக்கு...

நான் தொண்டர்கள் புடைசூழ அந்த பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி, மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினேன். அதுபோல் 2016-ல் வர்தா புயலின்போதும் தொகுதி மக்களுக்கு உதவி செய்தேன்.

2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் 90 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. இப்படி மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், முன்னின்று கைகொடுத்து உதவுகிறேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்கிறேன்.

தொகுதி மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் எப்போதும் பங்கு கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணி செய்வதற்கு என்னை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடைவிடாமல் 12 மணி நேரம்...

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது மதிய உணவுக்கு பின்னர் சிறிதுநேரம் ஓய்வெடுப்பது உண்டு. ஆனால், மா.சுப்பிரமணியன் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் இடைவிடாமல் வீதி, வீதியாக ஆட்டோவில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அவர் காலை, மதிய நேரங்களில் சாலையோர கடைகளிலேயே தொண்டர்களுடன் உணவு அருந்திவிட்டு தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Next Story