வாக்குச்சாவடிகளுக்கு 1,042 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


வாக்குச்சாவடிகளுக்கு 1,042 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 5 April 2021 5:26 PM GMT (Updated: 5 April 2021 5:28 PM GMT)

ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு 1,042 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி அந்தந்த தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

ஊட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்ஸ் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா முன்னிலையில் பாதுகாப்பு கிடங்கின் சீல் அகற்றப்பட்டது.

தொடர்ந்து ஊட்டி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட 31 மண்டல குழுக்களிடம் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்த்து கொடுக்கப்பட்டது. இதனை தேர்தல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

கொரோனா பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பயன்படுத்த கொரோனா பாதுகாப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். 

வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ள பணியாளர் ஒருவர், கிருமிநாசினி மற்றும் கையுறை வழங்க பணியாளர் ஒருவர் என கூடுதலாக 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். 
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரியில் ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் 1,042 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,042 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,201 வாக்கை உறுதி செய்யும் எந்திரங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 285 எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  
அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளில் பொருத்தி சரிபார்ப்பார்கள். பின்னர் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். சரியாக வாக்குகள் பதிவாகிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம். பின்னர் மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு இன்று காலை 6 மணி முதல் தேர்தல் நடைபெறும் என்றனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நேற்று வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றி சென்ற வாகனங்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர்.  
முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை ஊட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுதர் பெஹரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பதற்றம் நிறைந்த 49 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் அறைகளில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

இதற்காக 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 280 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  
இந்த பணியை கூடலூர் தொகுதி தேர்தல் அலுவலரும் ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, 280 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும். செல்போன்களை கொண்டு வரக்கூடாது என்றனர்.

Next Story