கொரோனா செலவு விவரங்களை 20 நாட்களில் தெரிவிக்க வேண்டும்; புதுவை அரசுக்கு தேசிய தகவல் அறியும் ஆணையம் உத்தரவு


கொரோனா செலவு விவரங்களை 20 நாட்களில் தெரிவிக்க வேண்டும்; புதுவை அரசுக்கு தேசிய தகவல் அறியும் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 16 April 2021 10:47 AM GMT (Updated: 16 April 2021 10:47 AM GMT)

கொரோனா செலவு தொகைக்கான விவரங்களை 20 நாட்களில் அளிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு தேசிய தகவல் அறியும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா

கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்காக புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சவுரவ்தாஸ் என்பவர் புதுச்சேரி சுகாதாரத்துறையிடம், கொரோனாவுக்கு செலவிடப்பட்ட தொகை, வாங்கிய சாதனங்கள், மருந்து தொடர்பான விவரங்கள் மற்றும் கொள்முதல் செய்த நிறுவனங்கள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார்.

மேல்முறையீடு

தகவல் அளிக்கும் அதிகாரி ரமே‌‌ஷ், மனுதாரருக்கு தேவையான பதில் சுகாதார இணைய தளத்தில் உள்ளது என்று கூறி, உரிய பதில் அளிக்கவில்லையாம். எனவே அவர் சுகாதாரத்துறை இயக்குனரிடம் மேல்முறையீடு செய்தார். இதனை தொடர்ந்து அவர் மனுதாரருக்கு அளித்த பதிலில், இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன. இன்னும் சாதனங்கள், மருந்துகள் வாங்கி வருவதால் முழு விவரங்களையும் வெளியிட இயலாது என்று தெரிவித்தனர்.

எனவே மனுதாரர் சவுரவ்தாஸ் இது குறித்து டெல்லியில் உள்ள தேசிய தகவல் அறியும் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு ஆணையம் மனுதாரர் கோரிய விவரங்களை தர கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரி சுகாதார துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் புதுச்சேரி சுகாதாரத்துறை அதற்கான விவரங்களை தரவில்லை.

20 நாட்களுக்குள்...

இதனை தொடர்ந்து சவுரவ்தாஸ் மீண்டும் தேசிய தகவல் அறியும் ஆணையத்தில் முறையிட்டார். அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி மத்திய தகவல் ஆணைய துணை பதிவாளர் ராவ், புதுவை சுகாதார துறைக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், தேசிய தகவல் அறியும் ஆணைய உத்தரவை புதுவை சுகாதாரத்துறை மதிக்கவில்லை. விண்ணப்பதாரர் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் மனுதாரருக்கும், மத்திய தகவல் ஆணையத்திற்கும் இந்த கடிதம் கிடைத்த 20 நாட்களுக்குள் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story