சென்னையில் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 60 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் முழு ஊரடங்கை மீறி வெளியில் தேவை இன்றி சுற்றிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
பூந்தமல்லி,
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பெருநகர சென்னை போலீஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், வாகன தணிக்கைகள் குறித்து சென்னை அமைந்தகரை, அண்ணா வளைவு அருகில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
முழு ஊரடங்கையொட்டி சென்னை முழுவதும் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 200 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வோரிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு அவர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
60 வாகனங்கள் பறிமுதல்
இதுவரை ஊரடங்கை மீறி தேவை இன்றி வெளியில் சுற்றிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. முன்களப்பணியாளர்களாக செயல்பட்டு வரும் போலீசார் இதுவரை 3 ஆயிரத்து 609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 258 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை கொரோனா முதல் மற்றும் 2-வது அலையை சேர்த்து சென்னை போலீஸ் துறையில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். முதல் அலையில் இறந்த போலீசாரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அதேபோல் 2-வது அலையில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தாருக்கும் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
16 ஆயிரம் போலீசார் தடுப்பூசி
இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்பூசி போட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையங்களுக்கு வெளியே பந்தல் அமைத்து கிருமிநாசினி, கொரோனா கவச உடை வழங்கப்பட்டு வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கிற்கு மக்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்கினார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2-ந்தேதி அன்றும் இதேபோல முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story