அறிகுறி மற்றும் பயத்துடன் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மருந்து பெட்டகம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்


அறிகுறி மற்றும் பயத்துடன் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மருந்து பெட்டகம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 13 May 2021 5:10 AM GMT (Updated: 13 May 2021 5:10 AM GMT)

கொரோனா பரிசோதனை மையத்துக்கு அறிகுறி மற்றும் பயத்துடன் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்தை (வார் ரூம்) பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையத்தை உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மையத்தில் 104 என்ற அவசர எண்ணுக்கு வரும் அழைப்புகளில், நோயாளிகளின் நிலையை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது.சில ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினை இருந்தால், இந்த கட்டளை மையத்தில் உள்ள குழு மூலமாக, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையும் இதன் மூலம் எடுக்கப்படுகிறது.அந்தவகையில் மாநகராட்சி ஆலோசனை மையம் மற்றும் டி.எம்.எஸ். கட்டளை மையத்தையும் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு உதவி செய்ய மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் முயற்சி செய்து வருகிறது.

மருந்து பெட்டகம்

மாநகராட்சி சார்பில் புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இதற்கு முன்பு கொரோனா தொற்று உறுதி ஆன பிறகு மருந்துகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள புதிய நடவடிக்கையின் படி, இன்று (அதாவதுநேற்று) முதல், அறிகுறி மற்றும் பயத்துடன் கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு, கொரோனா அறிகுறி உடையவர்களாக கருதி, பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும்.இதற்காக 30 ஆயிரம் மருந்து பெட்டகங்கள் தயார் செய்து, இன்று முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளை முன்னதாகவே சாப்பிட்டு வந்தால், உடல்நிலை பாதுகாக்கப்படும். இது ஒரு புதிய முயற்சி. இதன் மூலம் கொரோனா தொற்று குறையும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story