அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் மெய்யநாதன் தகவல்


அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x
தினத்தந்தி 27 May 2021 5:52 PM GMT (Updated: 27 May 2021 5:52 PM GMT)

நன்னிலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நன்னிலம்,

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகளை கண்காணிக்க அரசு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை நியமித்துள்ளது. அவர் கடந்த 2 நாட்களாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று குடவாசல், எரவாஞ்சேரி, திருவீழிமிழலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எரவாஞ்சேரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்்டர் சாந்தா தலைமை தாங்கினார். ் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரசவ வார்டு

சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் திருவிழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அவரை வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி வரவேற்றார். அமைச்சர் மெய்யநாதன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு கட்டிட வசதி குறித்தும் பிரசவ வார்டு குறித்தும் கேட்டறிந்தார்.

சுற்றுச்சுவர்

மேலும் பிரசவ வார்டை சீரமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கலெக்டரை கேட்டுக்கொண்டார். அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவும், மின் வசதியை சீர் செய்யவும், உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வருகிற 29-ந்் தேதி மீண்டும் இந்த மருத்துவமனைக்கு வரும்போது பிரசவ வார்டு சீரமைக்கும் பணிநடைபெற வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோதிராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பிரமணியன், ஊராட்சிதலைவர்கள் மணவாளநல்லூர் பரகத்நிஷா சித்திக், தேதியூர் வசந்தா, திருவீழிமிழலை கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவமனையின் அடிப்படை தேவைகள் குறித்தும் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார். அப்போது க.மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்பட பலர் அருகில் இருந்தனர். தொடர்ந்து, எடையூர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளை பார்வையிட்டு, அடிப்படை தேவைகள் குறித்தும் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)மணிவண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் .கீதா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) உமா, வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, தாசில்தார் ஜெகதீசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நன்னிலம்

நன்னிலம் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்களிடம் சிகிச்சை முறை பற்றியும் ஆக்சிஜன் நிலை பற்றியும் கேட்டறிந்்தார். மேலும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைத்து தொடக்க நிலையில் காய்ச்சல் இருமல் போன்ற கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நடமாடும் விற்பனை வாகனங்களை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைபொருட்கள் அடங்கிய நடமாடும் வாகனங்கள் மூலம் பொருட்கள் அனைத்து பகுதி மக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது 257 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் 106 டன் காய்கறிகள் மற்றும் 5 டன் பழங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story