தொடங்கிய முதல் நாளிலேயே கொட்டித்தீர்த்த பருவமழை வெள்ளக்காடாக மாறிய மும்பை பஸ், ரெயில்கள் நடுவழியில் நின்றன


தொடங்கிய முதல் நாளிலேயே கொட்டித்தீர்த்த பருவமழை வெள்ளக்காடாக மாறிய மும்பை பஸ், ரெயில்கள் நடுவழியில் நின்றன
x
தினத்தந்தி 10 Jun 2021 12:07 PM IST (Updated: 10 Jun 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

தொடங்கிய முதல் நாளிலேயே கொட்டித்தீர்த்த பருவமழையால் மும்பை வெள்ளக்காடாக மாறியது. மழைநீரில் பஸ், ரெயில்கள் சிக்கியதால் நடுவழியில் நின்றன. வெளுத்து வாங்கிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மும்பை, 

நாட்டில் அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் கேரளாவில் தொடங்கியது.

மராட்டிய தலைநகர் மும்பை மற்றும் அருகே உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பருவமழை தொடங்கியது. நேற்று முன்தினமே மழை பெய்தாலும் நேற்று தான் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

ஆரம்பமே அமர்க்களம் என்ற வகையில் தொடங்கிய முதல் நாளிலேயே இடி, மின்னலுடன் மக்களை மிரட்டியபடி கனமழை கொட்டித்தீர்த்தது. காலையில் தொடங்கிய மழை மாலை வரை இடைவிடாமல் பெய்தது.

இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகரான மும்பை பருவமழையால் மிதக்க தொடங்கியது. சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. மிலன், கார், அந்தேரி, மலாடு பகுதிகளில் உள்ள 4 சுரங்கப்பாதைகள் மூழ்கியதால், அவற்றை போக்குவரத்து போலீசார் மூடினர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து முடங்கியது.

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் காரணமாக கடந்த 2 நாட்களாக தான் மக்கள் அதிக அளவில் வெளியில் வரத் தொடங்கினர். எனவே பல்வேறு தேவைகளுக்காகவும், வேலைக்காகவும் வெளியே வந்த மக்கள் அடைமழையில் சிக்கி கொண்டனர். சாலைகளை வெள்ளம் சூழ்ந்ததால் செய்வதறியாமல் திகைத்தனர். பல சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தேங்கிய வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு தங்களது வாகனங்களை தள்ளிக்கொண்டே சென்றனர். மேலும் பலர் வாகனங்களை தள்ள முடியாதால் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி விட்டு நடையை கட்டத் தொடங்கினர்.

இதேபோல ஏராளமான பஸ்களும் மழைவெள்ளத்தில் சிக்கி கொண்டு முன்னேறி செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. இதனால் பஸ்களில் இருந்து பயணிகள் கீழே இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலைகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது. மாநகராட்சி ஊழியர்கள் நகர சாலைகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். கடலில் சுமார் 4 மீட்டர் உயரம் வரை அலை எழுந்ததால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதேபோல பல இடங்களில் தண்டவாளங்கள் மூழ்கி அவை கால்வாய் போல காட்சியளித்தன. ரெயில்கள் பல ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர். மேலும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து தானே, வாஷி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் அத்தியாவசிய ஊழியர்களுக்கு மட்டுமே மின்சார ரெயில்களில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே அத்தியாவசிய வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பருவமழை தொடங்கிய மகிழ்ச்சி பொதுமக்களுக்கு ஏற்பட்டாலும், தொடக்க நாளிலேயே பருவமழை மக்களை பாடாய் படுத்தி விட்டது.

மும்பையில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாந்தாகுருஸ் பகுதியில் 22.2 செ.மீ. மழையும், கொலபா பகுதியில் 4.6 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

இதற்கிடையே மும்பை கட்டுப்பாட்டு அறை, தானே, பால்கர், ராய்காட் மாவட்ட கலெக்டர்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடர்பு கொண்டு மழையில் சிக்கி தவிக்கும் மக்களை அவசரமாக செயல்பட்டு காப்பாற்றுமாறு உத்தரவிட்டார்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும், அவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்.

மும்பை, கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு பலத்த மழை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது
மும்பையில் நேற்று மழை கொட்டித்தீர்த்த நிலையில், மும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் அங்கு 4 நாட்களும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ராய்காட்டில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் புனே, சத்தாரா, கோலாப்பூரில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Next Story