சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியை ஏமாற்றி நகை கொள்ளை கே.கே.நகரில் மர்ம நபர்கள் அட்டூழியம்


சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியை ஏமாற்றி நகை கொள்ளை கே.கே.நகரில் மர்ம நபர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 14 July 2021 11:08 PM GMT (Updated: 14 July 2021 11:08 PM GMT)

சென்னை கே.கே.நகரில் சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் அவர் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை, 

சென்னை கே.கே.நகர் முனிசாமி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 68). இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கினார். பின்னர் வீட்டுக்கு தனியாக திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த 2 மர்மநபர்கள், பரபரப்பாக அலமேலுவிடம் பேசினார்கள்.

பெரிய கலவரம் அந்த பகுதியில் நடக்கிறது. நீங்கள் தனியாக நடந்து போகாதீர்கள். உங்களை நாங்கள் வீட்டில் விடுகிறோம். ஆட்டோவில் ஏறுங்கள் என்று அலமேலுவை மறுபேச்சு பேசவிடாமல் ஆட்டோவில் அந்த மர்ம நபர்கள் ஏற்றிக்கொண்டனர். ஆட்டோவில் ஏறியதும், கழுத்தில் நகை ஏதும் அணிந்திருந்தால், கலவரக்காரர்கள் பறித்து சென்று விடுவார்கள் என்று, அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை அந்த மர்ம நபர்கள் கழற்றி வைத்து கொண்டனர்.

அலமேலுவால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் நல்லது செய்கிறார்களா? அல்லது கெட்டது செய்கிறார்களா?, என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுபற்றி யோசித்து முடிவு எடுப்பதற்குள், பாட்டி இனி பயமில்லை, இறங்கி கொள்ளுங்கள் என்று சொன்ன மர்ம நபர்கள் ஆட்டோவை விட்டு அலமேலுவை இறக்கி விட்டனர். பின்னர் அவர்கள் மின்னல் வேகத்தில் ஆட்டோவில் சென்று விட்டனர். அலமேலு அணிந்திருந்த நகைகளை கழற்றிய அந்த மர்ம நபர்கள், அதை அலமேலுவிடம் திருப்பிக்கொடுக்காமல் சென்று விட்டனர்.

அதன்பிறகுதான், தான் அணிந்திருந்த நகைகளை பறிகொடுத்து விட்டதை அலமேலு உணர்ந்தார். உதவி செய்வது போல நடித்து அந்த மர்ம நபர்கள் இருவரும், அலமேலுவிடம் அவர் அணிந்திருந்த நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அலமேலு இது தொடர்பாக கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த நூதன கொள்ளை நபர்களை தேடி வருகிறார்கள்.

அதேபோல் விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேமாகுமாரி (70). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், தங்களை போலீஸ் என பிரேமாகுமாரியிடம் அறிமுகம் செய்தனர். பின்னர் பொது இடத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து சென்றால் யாராவது பறித்து சென்றுவிடுவார்கள் என்று கூறி அவர் அணிந்திருந்த 18 பவுன் நகையை கழற்றி வாங்கி, தாளில் மடித்து அவரது பையில் வைத்தனர்.

பிரேமாகுமாரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அந்த தாளில் நகைகளுக்கு பதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் இருவரும் போலீஸ் போல் நடித்து அவரது நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இப்படிக்கூட சென்னையில் கொள்ளை நடக்கும் என்பதை சாலையில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகள் தெரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

Next Story