தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2021 5:49 AM IST (Updated: 29 July 2021 5:49 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ‘உரிமை குரல் முழக்க போராட்டம்’ எனும் பெயரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி சேலத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டம் போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அ.தி.மு.க. மாநில-மாவட்ட நிர்வாகிகள் தங்களது வீடுகள் உள்பட குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையிலும் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘அண்ணே... அண்ணே... ஸ்டாலின் அண்ணே.... நம்ம ஊரு, நல்ல ஊரு... இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே...’, என்று பாட்டுப்பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ‘சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் சொன்னபடி மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும், அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது’, என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

சைதை துரைசாமி

சைதாப்பேட்டையில் பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் சொ.கடும்பாடி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைத்தலைவர் டி.யாதவர்மன், சேவியர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் நீட் தேர்வு ரத்து, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கவேண்டும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1,000 வழங்கவேண்டும் உள்பட தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

சென்னை முழுவதும்...

சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வி.ப.ஜெயபிரதீப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதேபோல தியாகராயநகரில் எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதுபோல சென்னை முழுவதும் பல இடங்களில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை புறநகர்

அதேபோல் தண்டையார்பேட்டையில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும், ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தலைமையிலும், புதிய ராணுவ சாலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவொற்றியூர் தேரடியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையிலும், அயனாவரத்தில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமையிலும், பழவந்தாங்கலில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், பெருங்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமையிலும், சிட்லபாக்கத்தில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையிலும், பல்லாவரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் தலைமையிலும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story