கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் தஞ்சையில் 5-ந்தேதி உண்ணாவிரதம்


கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் தஞ்சையில் 5-ந்தேதி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 30 July 2021 12:16 AM GMT (Updated: 30 July 2021 12:16 AM GMT)

கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் வருகிற 5-ந்தேதி தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மக்கள் நல்வாழ்விற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மீன்வளக்கொள்கை குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், தவறான பொய் பிரசாரங்களை செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளை கண்டித்தும், இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 3 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மீனவர் அணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. .

மோடி துணையாக இருப்பார்

கர்நாடக அரசு மேகதாதுவிற்கு குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறிய கருத்தையே புதிதாக பொறுப்பேற்று இருக்கும் இன்றைய முதல்-மந்திரியும் வலியுறுத்தி இருக்கிறார். இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அணை கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதி. மேலும் நமது பிரதமரோ, நீர்வளத்துறை மந்திரியோ, கர்நாடகா அணை கட்டிக்கொள்ள எந்தவொரு அனுமதியும் வழங்கவில்லை.

தமிழக மக்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டுள்ள பிரதமர் மோடி, என்றென்றும் நமக்கு துணையாக இருப்பார்.

உண்ணாவிரத போராட்டம்

கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று சொல்லி வருவது வேதனைக்குரியது. எனவே தொடர்ந்து தமிழக உரிமைக்கு எதிராக மேகதாது அணை கட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு, மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சையில் ஆகஸ்டு 5-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் தஞ்சை பனகல் பில்டிங் அருகில் நடைபெற இருக்கிறது.

இதற்கு நான் தலைமை தாங்குகிறேன். தஞ்சை மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெருமக்களும், விவசாய சங்கத்தலைவர்களும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story