முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோவில் அர்ச்சகர்களாக நியமனம் ஐகோர்ட்டில் அரசு தகவல்


முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோவில் அர்ச்சகர்களாக நியமனம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 17 Aug 2021 4:19 AM GMT (Updated: 17 Aug 2021 4:19 AM GMT)

முறையாக பயிற்சி பெற்றவர்களை மட்டுமே கோவில் அர்ச்சகர்களாக நியமிப்பதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை 6-ந்தேதி விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது.

அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

ரத்து செய்யவேண்டும்

அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றித்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தவறானது. எனவே இந்த 38 கோவில்களுக்கு அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

பயிற்சி

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கையும் அந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிபதி, இது போன்ற அர்ச்சகர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? ஆகம விதிகளின்படி முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், ‘முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகின்றனர்’ என்றார்.

மாற்றம்

அதையடுத்து, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

Next Story