காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
x
தினத்தந்தி 6 Sep 2021 4:20 AM GMT (Updated: 6 Sep 2021 4:20 AM GMT)

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள், விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். டீசல் விலை ஏற்றம் காரணமாக ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் குறைந்த அளவே மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க சென்னையின் பல இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து இருந்தனர். போலீசார், மாநகராட்சி பணியாளர்கள், சமூக கட்டுப்பாடுகளையும் அரசு விதிகளையும் மதித்து நடக்க வேண்டுமென பொதுமக்கள், மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

மீன் விலை குறைவு

நேற்று ஏராளமான சிறிய வகை மீன்கள் கிடைத்ததால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது. மற்ற நாட்களில் விற்கப்படும் விலையில் பாதி விலைக்கு விற்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், மீன் பிரியர்களும் மகிழ்ச்சியோடு மீன்களை வாங்கிச் சென்றனர்.

சிறிய ரக வஞ்சிரம் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், இறால் உள்ளிட்ட சிறிய ரக மீன்கள் அதிக அளவில் கிடைத்ததால் சற்று விலை குறைவாக விற்கப்பட்டது. இதனை மீன் பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். பெரிய மீன்களுக்கு மட்டுமே விலை அதிகமாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story