வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தரமாக கட்டப்படும்: அமைச்சர் முத்துசாமி


வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தரமாக கட்டப்படும்: அமைச்சர் முத்துசாமி
x
தினத்தந்தி 11 Sep 2021 10:42 PM GMT (Updated: 11 Sep 2021 10:42 PM GMT)

மக்களே விரும்பி வந்து குடியேறும் வகையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் தரமாக கட்டப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு
சென்னையை அடுத்த ராமாபுரம் பாரதி சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கே.கே.நகர் கோட்டம் மூலம் ரூ.78 கோடியே 44 லட்சம் மதிப்பில் 384 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதிபிரிவு மூலம் கட்டி பயனாளர்களிடம் 2019-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.இதில் 2 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த குடியிருப்பின் கட்டிடத்தை கையால் தொட்டாலே சிமெண்டு பூச்சுகள் உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமலும் இருக்கின்றன. கட்டிடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும், இங்குள்ள அனைவரும் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருவதாகவும், கட்டிடத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அங்கு குடியிருப்போர் புகார் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் நேற்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, டி.ஆர்.பாலு எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா மற்றும் வீட்டுவசதித் துறை அதிகாரிகள் பொதுமக்கள் புகார் தெரிவித்த அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்தனர்.

அங்கு குடியிருப்போரிடம் அமைச்சர் முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தரமாக கட்டப்படும்
வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ள குறைகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. அதை யார், யார் கட்டினார்கள்?, எப்போது கட்டப்பட்டது? என்று பார்க்க வேண்டாம். புகார் வந்தால் உடனடியாக ஆய்வு செய்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

பழைய கட்டிடங்கள், புதிய கட்டிடங்கள், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் மட்டுமன்றி 3-வதாக உள்ள நபர்கள் மூலம் கண்காணித்து ஆய்வு செய்யப்படும். வீட்டுவசதி வாரிய குடியிருப்பு என்றாலே பொதுமக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இந்த நிலையை மாற்றி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை மக்களே விரும்பி வந்து குடியேறும் அளவுக்கு தரமாக கட்டவேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படியே கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story