தேசிய அரசியல்: சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்த சித்தராமையா


தேசிய அரசியல்: சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்த சித்தராமையா
x
தினத்தந்தி 12 Oct 2021 2:28 AM IST (Updated: 12 Oct 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று சோனியா காந்தி விடுத்த அழைப்பை சித்தராமையா நிராகரித்துள்ளார்.

பெங்களூரு:

பாதாமி மறுவாழ்வு

  கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் காலம் முதல்-மந்திரியாக இருந்தவர் சித்தராமையா. அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, 2018-ம் ஆண்டு தேர்தலுடன் தான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆகலாம் என்று அவர் கனவு கண்டார். அதற்கேற்பவே அவர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பிட்டு சொல்லும்படியான ஊழல் புகார்கள் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார்.

  ஆனால் தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக அமையவில்லை. அந்த தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா, சொந்த தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் படுதோல்வி அடைந்தார். வட கர்நாடகத்தில் இருக்கும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் அவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது நூலிழையில் வெற்றி பெற்றார். ஒருவேளை அந்த தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தால், சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கை பிரகாசமாக இருந்திருக்காது. அவர் தொடர்ந்து துடிப்பான அரசியலை மேற்கொள்ள அவருக்கு பாதாமி மறுவாழ்வு அளித்தது என்றே சொல்லலாம்.

ஏராளமான திட்டங்கள்

  கர்நாடகத்தில் சித்தராமையா மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக திகழ்கிறார். அவர் சார்ந்த குருப சமூகம், கர்நாடகத்தில் லிங்காயத், ஒக்கலிகருக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய சமூகமாக உள்ளது. அதனால் அவருக்கு சாதி ரீதியாகவும் பலம் உள்ளது. அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அமல்படுத்தினார். அதனால் அவருக்கு அந்த சமூகங்களின் ஆதரவும் உள்ளது. மதசார்பற்ற கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அவர், பிரதமர் மோடிக்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

  அதனால் கர்நாடக காங்கிரசில் சித்தராமையா பலம் வாய்ந்த தலைவராக திகழ்கிறார். கட்சியில் தற்போது உள்ள பெரும்பகுதி எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். கர்நாடக காங்கிரசில் சித்தராமையா ஒரு அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். அதனால் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் கூட டி.கே.சிவக்குமார், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று சித்தராமையா விரும்புகிறார். கட்சியின் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்ட நிலையில் எப்படியாவது முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று நினைத்து டி.கே.சிவக்குமார் தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறார். அவருக்கும் ஒக்கலிகர் சமூக பலம் உள்ளது. அதே நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசிய அரசியலில்...

  அதனால் சித்தராமையா-டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. சித்தராமையா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரது ஆதரவாளர்கள், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று முழக்கம் எழுப்புகிறார்கள். அதே போல் டி.கே.சிவக்குமார் பங்கேற்கும் விழாக்களில் அவரே அடுத்த முதல்-மந்திரி என்று கோஷம் போடுகிறார்கள். கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை நியமனம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்காவிட்டால், கட்சியில் பெரும் சிக்கல் ஏற்படும். அதனால் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் டி.கே.சிவக்குமார் திணறுகிறார். இது காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது.

  சமீபத்தில் டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் மாவட்ட தலைவர்கள் உள்பட புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு அனுமதி வழங்குமாறும், சித்தராமையா பெரும் இடையூறாக இருப்பதால் அவரை தேசிய அரசியலுக்கு அழைத்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர், பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட சில முன்னணி தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத்திற்கு, சித்தராமையாவை தேசிய அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலிடம் விரும்பவில்லை

  பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து அமரிந்த்சிங் நீக்கப்பட்டார். அங்கு இளம் தலைவர் ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 70 வயதை தாண்டியுள்ள சித்தராமையா, மாநில அரசியலில் நீடிப்பதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், கர்நாடக காங்கிரசில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என்ற 2 அதிகார மையங்கள் உள்ளன. இந்த 2 அதிகார மையங்களால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுமோ என்று மேலிட தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.

  இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை தேசிய அரசியலில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்துள்ளது. இதையடுத்து சோனியா காந்தியிடம் இருந்து சித்தராமையாவுக்கு டெல்லி வரும்படி கடந்த வாரம் திடீரென அழைப்பு வந்தது. அதன் பேரில் சித்தராமையா டெல்லிக்கு சென்று சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

துணைத்தலைவர் பதவி

  அப்போது சோனியா காந்தி, தேசிய அளவில் காங்கிரஸ் சோதனைகளை சந்தித்து வருவதாகவும், அதனால் உங்களை போன்ற பலமான தலைவர்கள் தேசிய அளவில் கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. அதனால் தாங்கள் மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. அவ்வாறு தேசிய அரசியலுக்கு வந்தால், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பதவி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் பதவி வழங்குவதாகவும் சோனியா காந்தி கூறினார் என்று சொல்லப்படுகிறது.

  சோனியா காந்தியின் இந்த அழைப்பை அதே இடத்தில் சித்தராமையா நிராகரித்துவிட்டதாகவும், தனக்கு கர்நாடக அரசியலில் மட்டுமே ஆர்வம் இருப்பதாகவும், தான் எக்காரணம் கொண்டும், தேசிய அரசியலுக்கு வர விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையாவின் இந்த முடிவால், சோனியா காந்தி மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

போட்டி இருக்காது

  சித்தராமையா தேசிய அரசியலுக்கு சென்றுவிட்டால், கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் டி.கே.சிவக்குமார் தான் அடுத்த முதல்-மந்திரி என்பது உறுதியாகிவிடும். அதனால் முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இருக்காது. கட்சிக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த முடியாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
   ----
சட்டசபை தேர்தல் நெருங்குகிறது

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு தொடங்கிவிட்டால் அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு தயாராகும் பணிகள் தொடங்கிவிடும். மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) இப்போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கிவிட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட்டை இறுதி செய்வதிலும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படும். 

தேர்தலுக்கு பிறகு, யார் முதல்-மந்திரி என்பதை எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள் மிக முக்கியம். அதனால் தனது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவருமே பிடிவாதமாக இருப்பார்கள். இதை காங்கிரஸ் மேலிடம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story