மாவட்ட செய்திகள்

போகிப்பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அளவு குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் + "||" + Air pollution in Chennai reduced during Poki festival: Pollution Control Board

போகிப்பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அளவு குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

போகிப்பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அளவு குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட விழிப்புணர்வு காரணமாக போகிப்பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசின் அளவு கடந்த ஆண்டை விட நடப்பாண்டு குறைந்து காணப்பட்டுள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.
காற்றில் மாசு குறைவு

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைவர் ஆ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போகிப்பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து கடந்த 11-ந்தேதி முதல் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து போகிப்பண்டிகையின் முந்தைய நாள் சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத்தரத்தை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 1 கன மீட்டருக்கு 80 மைக்ரோகிராம் என்ற அளவில் உட்பட்டு இருந்தது. குறிப்பாக காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் அளவு 1 கன மீட்டருக்கு குறைந்தபட்சம் 18 மைக்ரோகிராம் முதல் அதிகபட்சமாக 54 மைக்ரோகிராம் வரை இருந்தது. சென்னையில் குறைந்தபட்சமாக தேனாம்பேட்டையில் 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரத்தில் 91 ஆகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து பாதிப்பு இல்லை

கடந்த ஆண்டு போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தில் 12 மண்டலங்களில் மிதமான அளவுகளிலும், 3 மண்டலங்களில் மோசமான அளவுாகவும் இருந்தது. நடப்பாண்டு 15 மண்டலங்களிலும் திருப்திகரமான அளவுகளிலேயே இருந்தது. சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்படவில்லை. இதனால் விமான போக்குவரத்தும் தடை ஏற்படவில்லை.

குறிப்பாக இன்று (நேற்று) குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை, மிதமான காற்றின் வேகம் காரணமாக புகை மண்டலம் அதிகமாக தென்படவில்லை. இதனால் தொலைதூர காணும் தன்மை நன்றாக இருந்ததால், விமான புறப்பாடு மற்றும் வருகை போக்குவரத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

டயர், டியூப் எரிக்கப்படவில்லை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் இரவில் வெளியில் வராத காரணத்தால் போகிப்பண்டிகையின் போது மாசின் அளவு கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தது. இந்த அளவு மாசு குறைவதற்கு பொதுமக்களிடம் இருந்த விழிப்புணர்வும் காரணமாகும்.

குறிப்பாக டயர், டியூப், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்காமல் ஒத்துழைப்பு தந்தனர். ஒத்துழைப்பு நல்கிய குடியிருப்போர் சங்கங்கள், பொதுமக்களுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.