பணியின்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு


பணியின்போது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 May 2022 12:00 AM GMT (Updated: 13 May 2022 12:00 AM GMT)

பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியபாளையம்,

எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் செல்வம் (வயது 40) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள குளத்துமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சுப்பிரமணி என்பவரது வீட்டின் முன்பகுதியில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்சார ஒயர் ஒன்று செல்வம் மீது பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். பலியான செல்வத்துக்கு முனியம்மாள் என்ற மனைவியும், கணேஷ் (17) என்ற மகனும், யுவராணி (16) என்ற மகளும் உள்ளனர்.

வாக்குவாதம்

இந்த சம்பவம் குறித்து பெரிய பாளையம் போலீஸ் நிலையத்தில் செல்வத்தின் உறவினர்கள் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் நேற்று மாலை வரையில் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், முதல் தகவல் அறிக்கையை எடுத்துக் கொண்டு போலீசார் பிரேத பரிசோதனை செய்ய திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

இதனால் நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பும் ஏற்பட்டது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் புழல் புத்தகரம் புருஷோத்தமன் நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன்(47). இவர், புத்தகரம் லட்சுமி நகர் பெருமாள் கோவில் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். மாதவரம் அம்பேத்கர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த ஏழுமலை(46) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இ்ங்கு கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த ஏழுமலை, இரும்பு கம்பியை மடக்கிய போது அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story