கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 5 May 2017 9:45 PM GMT (Updated: 5 May 2017 8:00 PM GMT)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஐ.பி.எஸ். அதிகாரி சென்குமாருக்கு மீண்டும் பணி வழங்காததால் கேரள அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேரள அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

இடதுசாரி அரசு நீக்கியது

கேரள மாநில போலீஸ் தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சென்குமார் கடந்த 2015–ம் ஆண்டு மே 22–ந்தேதி நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட இவர் கடந்த ஜூன் 1–ந்தேதி இடதுசாரி அரசால் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்குமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்குமாரை பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதம் எனக்கூறியதுடன், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கடந்த 24–ந்தேதி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் அவருக்கு பணி வழங்காத கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.

தண்டிக்க வேண்டும்

இதைத்தொடர்ந்து கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு எதிராக சென்குமார் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அடுத்த மாதம் (ஜூன்) 30–ந்தேதியுடன் ஓய்வுபெறும் தனக்கு, பணி வழங்காத காலத்தை கணக்கில் எடுத்து பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

மேலும் கோர்ட்டு அவமதிப்பு சட்டம் 1972–ன் படி கேரள தலைமைச் செயலாளர் நளினி நெட்டோவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறியிருந்ததுடன், இந்த சட்டத்தின் கீழ் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு ஏற்கனவே ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

அவமதித்து விட்டது

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்குமார் சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், ‘சென்குமாருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என ஏப்ரல் 24–ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாததன் மூலம், சுப்ரீம் கோர்ட்டை கேரள அரசு அவமதித்து விட்டது’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக கேரள தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கை 9–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ரூ.25 ஆயிரம் அபராதம்

முன்னதாக இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல் தனது வாதத்தின் போது, சென்குமாருக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அது ஒரு வாதமல்ல. மறு ஆய்வு மனு எங்கள் முன் விசாரணைக்கு வரும்போது நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று கூறினர்.

அதற்கு பதிலளித்த கேரள அரசு வக்கீல், ‘இது தொடர்பாக அபராதம் எதுவும் விதிக்க வேண்டாம், அந்த மனுவை திரும்ப பெறுகிறோம்’ என்று கூறினார். ஆனால் அந்த மனுவை திரும்ப பெற அனுமதித்த நீதிபதிகள், இதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


Next Story