எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ பாரபட்சம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ பாரபட்சம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Jun 2017 6:06 PM GMT (Updated: 21 Jun 2017 6:06 PM GMT)

எதிர்க்கட்சிகளின் மீதான புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கும் சிபிஐ பாஜகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் புகார்களை புறக்கணிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

புதுடெல்லி

சமீபத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் மனைவியை விசாரித்தது என இரண்டு விவகாரங்களில் சிபிஐ காட்டிய வேகத்தை பாஜகவினருக்கு எதிராக காட்டுவதில்லை என அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சர் ஜே பி நட்டா பதவிக்கு வந்த பின் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முறைகேட்டை விசாரித்து வந்த எய்ம்ஸ்சின் தலைமை கண்காணிப்பு அதிகாரியை இடமாற்றம் செய்யும்படி அன்றைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஜே பி நட்டா கடிதம் எழுதினார். பின்னர் அவரே சுகாதாரத்துறை அமைச்சரானார். இந்த முறைகேட்டில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பொது நல மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேட்டிற்கு பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதை சிபிஐயும் உறுதி செய்துள்ளது. ஆனால் முறையான வழக்கு இன்னும் பதியப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அசுதோஷ் கூறினார். 

எனினும் இப்போது சிபிஐ குற்றச்சாட்டுகளை ”நிரூபிக்க இயலவில்லை” என்று கூறுகிறது. இதையே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும் கூறுகிறது. எதிர்க்கட்சிகள் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் சிபிஐ பாஜக என்றால் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கிறது என்றார் ஆம் ஆத்மி தலைவர் சௌரப் பரத்வாஜ்.


Next Story