குஜராத்தில் மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, கட்சியின் பலம் 51 ஆக குறைவு


குஜராத்தில் மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, கட்சியின் பலம் 51 ஆக குறைவு
x
தினத்தந்தி 28 July 2017 2:18 PM GMT (Updated: 2017-07-28T19:48:07+05:30)

குஜராத்தில் மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆமதாபாத், 


குஜராத் மாநிலத்தில் இருந்து மூன்று மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வேட்பாளாராக களமிறக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமத் படேல் களமிறக்கப்பட்டு உள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் பெரும் சூறாவளியில் சிக்கியது போன்று தொடர்ச்சியாக அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. 

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சங்கர்சிங் வாகேலே சமீபத்தில் அக்கட்சியை விட்டு விலகினார். சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் பாரதீய ஜனதா சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்திற்கு வாக்களித்து காங்கிரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விரைவில் விலகுவார்கள் என தகவல்கள் வெளியாகியது. இதனை உண்மையென நிரூபனம் செய்யும் வகையில் தொடர்ச்சியாக அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இது அக்கட்சியின் மாநிலங்களவை தேர்தல் வெற்றியை மங்க செய்து வருகிறது.

சட்டசபை காங்கிரஸ் கொறடாவும், சித்பூர் எம்.எல்.ஏ.வுமான பல்வந்த்சிங் ராஜ்புத், விரம்கம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. தேஜாஸ்ரீ படேல் மற்றும் பி.ஐ.படேல் ஆகிய 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இவர்கள் பாரதீய ஜனதாவில் தங்களை ஐக்கியமாக்கி கொண்டார்கள். இன்றும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளார்கள். பாலாசினோர் தொகுதியின் எம்.எல்.ஏ. மணிஷ் சவுகான், வான்ஸ்தா தொகுதியின் எம்.எல்.ஏ. ஷானாபாய் சவுதாரி, தாஸ்ரா தொகுதியின் எம்.எல்.ஏ. ராம்சிங் பார்மெர் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து உள்ளனர். இதற்கிடையே இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்து உள்ளனர். 

மொத்தம் 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலமானது 51 ஆக குறைந்து உள்ளது. இது அகமத் படேலின் வெற்றியை மங்க செய்து வருகிறது. அகமத் படேல் வெற்றி பெற வேண்டும் என்றால் அவருக்கு 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாகும், ஆனால் எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது காங்கிரசுக்கு.  மாநிலங்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நாங்கள் பதவி விலகிவரவில்லை எனவும் ராஜினாமா செய்துவரும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ராஜினாமா செய்து வரும் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவில் சேர்வதற்கு ஆர்வம் கொண்டு உள்ளனர். 


Next Story