மெக்ஸிகோவில் அனைத்து இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர்: சுஷ்மா சுவராஜ் தகவல்


மெக்ஸிகோவில் அனைத்து இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர்: சுஷ்மா சுவராஜ் தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2017 3:18 AM GMT (Updated: 2017-09-21T08:48:36+05:30)

நிலநடுக்கம் ஏற்பட்ட மெக்ஸிகோவில் அனைத்து இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. இதன் மத்திய பகுதிகளில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டி, பெபுலா, மோர்லோஸ், மெக்சிகோ மாநிலம், குவரெரோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

மெக்சிகோ சிட்டியின் புறநகர் பகுதி ஒன்றில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்று இந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. 3 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 21 குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சுமார் 40 பேர் வரை அங்கு சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 20 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.கடந்த 1985-ம் ஆண்டுக்குப்பின் நிகழ்ந்த மிகப்பெரிய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 248 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போர் இன்னும் முழுமையாக மீட்கப்படாததால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  

இந்நிலையில், ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், அங்கிருந்து மெக்சிகோவுக்கான இந்திய தூதரை தொடர்புகொண்டு பேசியதாகவும், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும்  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story