மராட்டியத்தில் விவசாயிகளின் பிரமாண்ட பேரணி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்!


மராட்டியத்தில் விவசாயிகளின் பிரமாண்ட பேரணி, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்!
x
தினத்தந்தி 11 March 2018 1:17 PM GMT (Updated: 11 March 2018 1:17 PM GMT)

மராட்டியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வரும் விவசாயிகளின் பேரணி மும்பை வந்தடைந்தது. #MaharashtraFarmers


மும்பை,

மராட்டியத்தில் அனைத்திந்திய கிசான் சபா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6–ந் தேதி நாசிக்கிலிருந்து சட்டசபை நோக்கி விவசாயிகள் பேரணியைத் தொடங்கினர். சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், திங்கட்கிழமை பேரணியாக சென்று விதான் பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். 

மராட்டியத்தில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கில் இருந்து மும்பையை நோக்கி அகில இந்திய கிஷான் சபா சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி புறப்பட்டனர். பிரமாண்ட பேரணி புனேயில் இருந்து மும்பை வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்) அமைப்பு விவசாயிகளை திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகிறது. பேரணியாக விவசாயிகள் வரும் வழியில் பிற கிராம விவசாயிகளும் பேரணியில் கலந்துக்கொண்டனர். பேரணியில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டு உள்ளனர். 
 
புனே நகரில் புறப்படும்போது 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. அதிகமான விவசாயிகள் மும்பை நகருக்குள் பேரணியாக வந்து உள்ளதால் நாளை நகரமே குலுங்கும் அளவிற்கு முற்றுகை போராட்டம் அமையப்போகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு சிவசேனா ஆதரவை தெரிவித்து உள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு எழும் நிலையில் நகரத்தை சேர்ந்தவர்களும் பேரணியில் பங்கு பெறலாம் என கூறப்படுகிறது. 

எங்களுடைய போராட்டமானது மிகவும் அமைதியாக இருக்கும். எங்கள் போராட்டம் காரணமாக மும்பை நகரம் குலுங்கப்போகிறது. எங்களின் பேரணியை நாளை காலை 11 மணிக்கு மேல் தொடங்கி மாலையில் முடிக்கிறோம் என்பதால், மாணவர்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் இடையூறு இருக்காது என ஏஐகேஎஸ் அமைப்பின் தலைவர் அசோக் தாவ்லே கூறிஉள்ளார். இதற்கிடையே அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
 
பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாசிக், தானே மற்றும் பால்கர் மாவட்ட நதி நீர் இணைப்பு திட்டத்தில் மாற்றம் செய்து பழங்குடி நிலங்கள் மூழ்காதவாறு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

Next Story