குஜராத்திற்கு ரூ.44,000 கோடி, அமராவதிக்கு ரூ. 2,500 கோடியா? மோடிக்கு தெலுங்கு தேசம் கேள்வி


குஜராத்திற்கு ரூ.44,000 கோடி, அமராவதிக்கு ரூ. 2,500 கோடியா? மோடிக்கு தெலுங்கு தேசம் கேள்வி
x
தினத்தந்தி 26 April 2018 9:08 AM GMT (Updated: 26 April 2018 9:25 AM GMT)

குஜராத் மாநில ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு தெலுங்கு தேசம் கேள்வியை எழுப்பி உள்ளது. #PMModi #Amaravati #BJP #TDP

புதுடெல்லி,
 
மத்திய அரசு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக எந்தஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து பாரதீய ஜனதா மற்றும் தெலுங்கு தேசம் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்தது. அதன் உச்சத்தில் தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து வெளியேறியது. தெலுங்கு தேசம் தொடர்ச்சியாக பாரதீய ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறது. மத்திய அரசு தென் மாநிலங்களை புறக்கணிக்கிறது எனவும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். 

பாரதீய ஜனதாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் தெலுங்கு தேசம், குஜராத் மாநில ஸ்மாட் சிட்டி திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை விமர்சனம் செய்து உள்ளது.

ஆந்திரபிரதேச மாநில தலைநகர் அமராவதியை 33 ஆயிரம் ஏக்கர் அளவில் கட்டமைப்பதை பாரதீய ஜனதா விமர்சனம் செய்தது. ஆனால் குஜராத் மாநிலம் தோலேராவிற்கு ஒரு லட்சம் ஏக்கர் அளவில் கையகப்படுத்தி உள்ளது. தலைநகர் அமராவதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பிரதமர் மோடி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என மத்திய அரசுக்கு எதிரான தாக்குதலை தெலுங்கு தேசம் முன்வைத்து உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தோலேராவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அமராவதி திட்டத்திற்கும் குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெலுங்கு தேசம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. கும்பம்பதி ராம் மோகன் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தோலேராவிற்கு மத்திய அரசு ரூ. 44,000 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. ரூ. 5 ஆயிரம் கோடி அளவில் திட்டத்தை முன்னெடுக்க நிதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் புதியதாக கட்டமைக்கப்படும் அமராவதிக்கு வெறும் 2,500 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. ரூ. 1,500 கோடியை மட்டுமே வழங்கி உள்ளது என்றார். குஜராத் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த போதே தோலேரா அவருடைய கனவு திட்டமாக இருந்தது என தகவல்கள் தெரிக்கிறது. 

    “ஆந்திர பிரதேச மாநில பாரதீய ஜனதா அமராவதி தலைநகர் 33,000 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்படுவதை விமர்சனம் செய்தது, ஆனால் குஜராத் மாநில அரசு தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால், மாநிலத்தில் காங்கிரஸ் தேர்தலில் சந்தித்த முடிவையே சந்திக்கும். பாரதீய ஜனதா துடைத்தெறியப்படும்,” எனவும் குறிப்பிட்டார். 

Next Story