தேசிய செய்திகள்

பாதுகாப்பு வசதிக்காக ரெயிலின் நடுப்பகுதியில் பெண்கள் பெட்டி + "||" + Women Box in the middle of the train for safety facility

பாதுகாப்பு வசதிக்காக ரெயிலின் நடுப்பகுதியில் பெண்கள் பெட்டி

பாதுகாப்பு வசதிக்காக ரெயிலின் நடுப்பகுதியில் பெண்கள் பெட்டி
தற்போது, ரெயில்களில் பெண்கள் பெட்டி, ரெயிலின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதை மாற்றி, ரெயிலின் நடுப்பகுதியில் பெண்கள் பெட்டியை வைக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

புறநகர் மற்றும் நீண்ட தூர ரெயில்களில் இந்த மாற்றம் செய்யப்படும். இந்த ஆண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக ரெயில்வே கடைபிடித்து வருவதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் பெட்டியை எளிதில் அடையாளம் காண அதற்கு தனி வண்ணம் பூசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இளஞ்சிவப்பு நிறம் பூச பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஜன்னல்கள் வழியாக சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க ஜன்னல்களில் கம்பி வலை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்கள் பெட்டிக்கு வரும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோரில் பெண்களும் இடம்பெறுவார்கள். ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பெண்களுக்கென தனி கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அனைத்து ரெயில்வே கோட்டங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.