தேசிய செய்திகள்

காஷ்மீரில் பா.ஜனதா மந்திரி கார் மீது கல்வீச்சு + "||" + In Kashmir bharathiya Janata minister on the car Stone throw

காஷ்மீரில் பா.ஜனதா மந்திரி கார் மீது கல்வீச்சு

காஷ்மீரில் பா.ஜனதா மந்திரி கார் மீது கல்வீச்சு
காஷ்மீரில் சிறுமி கற்பழிப்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜனதா மந்திரி கார் மீது கற்கள் வீசப்பட்டன.
கதுவா,

காஷ்மீரில் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில் ஒரு சிறுவன் உள்பட 8 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். என்றாலும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.


இந்த நிலையில், அங்கு ஹிராநகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பா.ஜனதாவை சேர்ந்த சுகாதாரத்துறை மந்திரி ஷாம்லால் சவுத்திரி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். ஆனால், சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, ஒரு கூட்டம் கோஷம் போட்டவாறு அவரது காரை முற்றுகையிட்டது. மேலும், மந்திரி காரை நோக்கி சரமாரி கற்களும் வீசப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

இதற்கு இடையே 5 பெண்களை கொண்ட உண்மை அறியும் குழு தனது அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடமும், பணியாளர் நலன் ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங்கிடமும் வழங்கியது. அதில், குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறி இருப்பதுடன், சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.