சிமி இயக்கத் தலைவர் உள்பட 18 பேருக்கு 7 ஆண்டு சிறை


சிமி இயக்கத் தலைவர் உள்பட 18 பேருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 15 May 2018 9:15 PM GMT (Updated: 15 May 2018 8:05 PM GMT)

இளைஞர்களுக்கு வெடிகுண்டுகளை கையாள பயிற்சி அளித்த சிமி இயக்கத் தலைவர் உள்பட 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொச்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கொச்சி,

கேரள மாநிலம் வாகமோன் மலைப்பகுதியில் தங்கல்பாரா என்னும் இடத்தில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் 2007–ம் ஆண்டு இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகளை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிமி இயக்கத் தலைவர் சப்தர் நகோரி உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டு பல்வேறு மாநில சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 17 பேரை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. மற்ற 18 பேருக்கு தண்டனை விவரம் மறுநாள் அறிவிக்கப்படும் என்று கூறியது. அதன்படி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிமி இயக்கத் தலைவர் சப்தர் நகோரி (வயது 48) உள்பட 18 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 14 பேர் கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிமி இயக்கத்துக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.


Next Story